மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
மானுடத்துக்காய் மனமிரங்கி மண்ணுலகிற்கு இறங்கி இறைவன் வந்த திருநாளிலும் சிறந்த இன்னொரு நாள் இங்கில்லை. கிறிஸ்து பிறப்பு நாள் உடலும் ஆன்மாவும் குதூகலிக்க வேண்டிய ஒப்பற்ற நாள். அந்நாளுக்கான கொண்டாட்டமாக 19.12.2022 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம் வடிவமைத்துக்கொண்டது.
அலுவலகப் பணியாளர்களும், களப்பணியாளர்களும் கரம் கோர்த்து பொருள் பொதிந்த களிப்பான நாளாக மாற்றிக்கொள்ள அன்றையபொழுது புலர்ந்தது. பல்வேறு அலங்காரங்களுடன், பிறக்கப்போகும் இறைமகனுக்காக அருமையான குடில் அமைக்கப்பட்டு அனைவரையும் வரவேற்றது.
உதவிச்செயலர் அருட்பணி.ஸ்டாலின்; அவர்கள் இறைவேண்டலுடன் திருவருகைக்கால நான்காவது வாரச் சிறப்பு மெழுகுவர்த்தி (அன்பு) அருட்தந்தை.அல்வரஸ் செபாஸ்டின் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அருட்தந்தை.ஜோசப் செல்வராஜ் அவர்கள் குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் வைத்துப் புனிதப்படுத்தினார். மறைமாவட்ட தலைமைக்குருவும் நமது சங்கத்தின் துணை தலைவருமான அருட்தந்தை.ஜெரோம் எரோணிமுஸ் தனது மன்றாட்டுடன் குடிலை திருநிலைப்படுத்தினார். நிர்வாக அலுவலர் திருமிகு.மோரிஸ் அவர்கள் விவிலிய அருட்வாக்குகளை வாசித்தபின் ‘இயேசு பாலன் பிறந்துள்ளார்’ என்ற சேர்ந்திசைப் பாடல் பாடப்பட்டது.
காலை 11:00 மணிக்கு டைமண்ட் அரங்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு இறைவணக்கப் பாடலுடன் தொடங்கியது. சங்கத்தின் செயலர் அருட்பணி.கபிரியேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அருட்தந்தை.ஆனந்தம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திண்டுக்கல் மாவட்டப் பணியாளர்கள் சிறப்புநடனம் ஆடினர். D.B.Tech பணியாளர்கள் இன்றைய சூழலில் உழைப்புச் சுரண்டலை பற்றி நாடகம் நடித்து மகிழ்வித்தனர். கோல்பிங் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.எலியாஸ் அவர்களின் கவித்துவமான அறிமுக உரையுடன் சங்கத்தின் செயல்பாட்டு இதழான ‘சமூக விழிகள்’ வெளியிடப்பட்டது.
அருட்தந்தை.பெனடிக்ட் பர்னபாஸ் அவர்கள் இதழினை வெளியிட அருட்தந்தை.அல்வரஸ் செபாஸ்டின்;, அருட்தந்தை.ஜோக்கிம், அருட்சகோதரி.புரூனோ, அசம்~ன் ஹவுஸ் மேலாளர் அருட்சகோதரி ஆகியோர் முதல் இதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்டப் பணியாளர்கள் வில்லு பாடலில் வியக்க வைத்தனர். தேனி வட்டாரப் பணியாளர்கள் கிராமிய கலைநடனம் ஆடி மகிழ்வித்தனர். அதன்பின் கிறிஸ்துமஸ் கீதம் பாடப்பட்டது. தலைமைக்குரு அருட்தந்தை.ஜெரோம் எரோணிமுஸ் அவர்கள் தலைமையுரையும் ஆசியுரையும் வழங்கியபின், கிறிஸ்துமஸ் கேக் இன்னிசை பாடலின் பின்னணியில் வெட்டிப்பகிரப்பட்டது. சங்கத்தின் உதவிச்செயலர் அருட்பணி.இராஜன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற, கிறிஸ்துமஸ் தாத்தா அவையில் தோன்றி அகமகிழச் செய்தார். அதைத் தொடர்ந்து அன்பின் விருந்து பரிமாறப்பட்டது.
மதிய உணவிற்க்கு பிறகு, பிற்பகல் 3.00 மணிக்குச் சங்கப் பணியாளர்கள் மகிழ்வுக்கூட்டம் நடைபெற்றது. திருமிகு.மோரிஸ் ‘இயேசப்பா வந்தாரு’ என்ற பாடலைப் பாட பணியாளர்கள் அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து பாடலைப் பாடினர். உதவிச்செயலர் அருட்பணி.இராஜன் அவர்கள் தொடக்கவுரை வழங்கினார். குழு விளையாட்டுக்களுடன் அனைவரும் குதுகலித்தனர். நட்புப்பகிர்வில் பரிசுகளை ஒவ்வொருவரும் பரிமாறிப் பரவசப்பட்டனர். செயலர் அருட்பணி.கபிரியேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சங்கம் வழங்கிய சிறப்புப்பரிசைப் பெற்று அனைவரும் மகிழ, உதவிச்செயலர் அருட்பணி.ஸ்டாலின் அவர்களின் நன்றியுரைடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது.